Primary Menu

Top Menu

September 25, 18

மதுரையில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டம் : உயர் பண மதிப்பு நீக்க கண்டனம் !!

பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு முடிந்துள்ளது. இந்த நவம்பர் 8-ந்தேதியை “கருப்பு தினம்” ஆக கடைபிடித்து எதிர்ப்பை வெளிப்படுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. நாடு முழுவதும் முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் முடிவு செய்தன.

அதன்படி இந்தியா முழுவதும் இன்று பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நள்ளிரவு பெற்ற சுதந்திரத்தை நவ.8 நள்ளிரவிலேயே இழந்தோம்; துன்பத்தை உருவாக்கி இருக்கக் கூடிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. எந்தத் திட்டமிடலும் இல்லாமல் திடீரென்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார்கள்.

மேலும் பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் 76 முறை மாறி மாறி பல அறிவிப்புகளும், அறிவுரைகளும், யோசனைகளும் வழங்கப்பட்டன. இவையெல்லாம் அறிவிப்பதற்கு முன்னர் பிரதமரோ, ரிசர்வ் வங்கியோ பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசித்து, திட்டமிட்டிருக்க வேண்டும். இதனால் வருகின்ற சங்கடங்கள், எதிர்கால பிரச்சினை பற்றி சிந்தித்திருக்க வேண்டும்.

இதே பிரச்சினையை மக்கள் தொடர்ந்து சொல்கிறார்கள். எதிர்க்கட்சிகள் நாங்களும் தொடர்ந்து சொல்கிறோம். மேலும் ரூபாய் நோட்டு விவகாரத்தை பாஜக தலைவர்களும் எதிர்க்கின்றனர்.

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பால் சிறு குறு தொழில்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அமைப்புச்சாரா தொழிலாளர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பார்த்து கணக்கிட்டுத்தான் இதையெல்லாம் எதிர்க்கிறோம். ஒட்டுமொத்த பணப்புழக்கத்தை முடக்கிய ஆட்சி மோடி தலைமையிலான ஆட்சி. ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டிய நிலை உருவாகும்.

ரேசன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து நவ.6-ம் தேதி அறிவிக்கப்பட்ட போராட்டம் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது; பிரதமர் வந்ததால் அல்ல. மேலும் மோடி அரசியலுக்காக சென்னை வரவில்லை; நாங்களும் அவரை அரசியலுக்காக பயன்படுத்தவில்லை. கருணாநிதி – பிரதமர் மோடி சந்திப்பை வைத்து அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி வெற்றி பெறாது. தி.மு.க. தலைவரை சந்தித்து நலம் விசாரித்த பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தனது இல்லத்துக்கு வந்து ஓய்வு எடுக்குமாறு அவரிடம் அழைப்பு விடுத்தார். இது மனிதாபிமானம் தான். அரசியலுக்கு அப்பாற்பட்டது.

மோடி கோபாலபுரத்திற்கு சென்று ஸ்டாலினுடன் கை குலுக்கியதால் தி.மு.க.வின் போராட்டம் நிறுத்தப்பட்டு விட்டதாகவும், மேலும் பாரதீய ஜனதாவுடன் தி.மு.க. கூட்டணி வைக்கும் என கற்பனை செய்திகளும் வெளியாகி உள்ளன. ஆனால் இதை திரித்துக்கூறி குழப்பத்தை ஏற்படுத்தலாம் என முயற்சி நடக்கிறது. ஆனால் அந்த கனவு நிச்சயம் பலிக்காது என கூறினார்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon