Primary Menu

Top Menu

September 26, 18

தமிழ் சினிமாவின் பொக்கிஷம் கமல்ஹாசன் !

கமல்ஹாசன், தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல இந்தியத் திரையுலகிலும் பல வித்தியாசமான படங்களிலும், கதாபாத்திரங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் கலைஞன். சினிமாதான் மூச்சு என வாழ்ந்து கொண்டிருக்கும் சிலரில் இவரும் குறிப்பிட வேண்டியவர்.
சினிமாவை இவரை விட வேறு யாராலும் காதலிக்கவும் முடியாது. காதலில் சிறப்பாற்றவும் முடியாது.

நடிப்புக்காக எதையும் செய்யத் துணியும் குணமே இவரை இந்த அளவிற்கு உயர்த்தி இருக்கிறது. இவர் போல இன்னொரு நடிகர் வந்தாலும் இவரது சாதனைகளை நிச்சயம் தொட முடியாது. நடிப்பு மட்டுமல்லாமல் மற்ற தொழில்நுட்ப விஷயங்களிலும் இவரது அறிவுக்கு முன் அந்தத் துறை சார்ந்தவர்களே நெருங்க முடியுமா என்பது சந்தேகமே.

1959 முதல் இன்று வரை திரைப்பட ரசிகர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கலைஞன் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரங்களில் ஒவ்வொன்றுமே குறிப்பிட வேண்டியவைதான். இருந்தாலும் அவற்றில் அனைவரையும் கவர்ந்த சில கதாபாத்திரங்களைப் பற்றிப் பார்ப்போம்.

16 வயதினிலே – சப்பாணி

ஒரு நடிகன் வளர்ந்து வரும் காலத்திலேயே கூட இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதிப்பாரா என யோசிக்க வைத்த கதாபாத்திரம் சப்பாணி. தமிழ்த் திரையுலகில் கோவணத்தைக் கட்டிக் கொண்டு ஒரு காட்சியில் நடித்த தைரியம் அன்று கமல்ஹாசன் என்ற கலைஞனுக்கு வந்தது. அது இன்று வரை வேறு யாருக்கும் வரவில்லை என்பதே உண்மை. இப்படத்தில் கமல்ஹாசன் நடிப்பைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தாலே ஆத்தா வையும் காசு கொடு என்ற வசனம் இன்றும் நம் காதுகளில் ஒலிக்கும்.

சிகப்பு ரோஜாக்கள் – திலீப்

நாயகன் என்றால் நல்லவனாக மட்டும்தான் நடிக்க வேண்டுமா ஒரு எதிர்மறை நாயகனாக நடிக்கக் கூடாதா என கமல்ஹாசன் நடித்த படம் இது. வெளியில் பார்ப்பதற்கு டிப்-டாப் ஆசாமியாக வலம் வருபவர் ஸ்ரீதேவியைக் காதலித்து திருமணம் செய்து கொள்வார். அதன் பின்தான் கமல்ஹாசனின் சுயரூபம் என்பது தெரிய வரும். சைக்கோத்தனமான அந்தக் கதாபாத்திரம் இன்றும் படம் பார்க்கும் போது ஒரு பயத்தைக் கிளப்பிவிடும் என்பது உண்மை.

கல்யாணராமன் – கல்யாணம், ராமன்

கதாநாயகர்கள் காமெடி பண்ணக் கூடாது என்பதெல்லாம் இல்லை, அவர்களும் காமெடி நாயகர்களாக நடிக்கலாம் என கமல்ஹாசன் நடித்த படம். இரு வேடங்களில் ஒரு வேடம் ஆவியாகச் சுற்றும் கல்யாணராமன். முன்பக்கம் இரண்டு நீட்டிய பற்கள், பைஜாமா, ஜிப்பா என சிம்பிளாக அதே சமயம் வித்தியாசமான தோற்றத்திலும், குரலிலும் நம்மை சிரிக்க வைத்ததோடு நெகிழ வைக்கவும் செய்த கதாபாத்திரம் இந்த கல்யாணராமன்.

வறுமையின் நிறம் சிவப்பு – ரங்கன்

இப்படி ஒரு யதார்த்த நடிப்பைப் பார்க்க முடியுமா என ரசிக்க வைத்த கதாபாத்திரம் ரங்கன். பசியின் கொடுமையையும், வேலையில்லா பட்டதாரிகளின் சிரமத்தையும் இதை விட வேறு யாரும் சிறப்பாக வெளிக்காட்டியிருக்க முடியாது என்று சொல்ல வைத்த படம். சாக்கடையில் விழுந்த ஒரு ஆப்பிளைக் கழுவி சாப்பிடும் அந்தக் காட்சியும், வீட்டிற்குள் வெறும் பாத்திரங்களை உருட்டி சாப்பிடுவது போல் நடிக்கும் அந்தக் காட்சியையும் நினைத்தால் இன்றும் கண் கலங்கிவிடும்.

ராஜ பார்வை – ரகு

முன்னணிக்கு வேகமாகச் சென்று கொண்டிருந்த காலத்திலேயே கமர்ஷியல் கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து பணம் சேர்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து பெயரைச் சேர்த்த கமல்ஹாசனின் மற்றுமொரு சிறப்பான படம். கண் பார்வையற்றவராக கமல்ஹாசன் நடித்த படம். மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் கமல்ஹாசனின் 100வது படம் என்ற சிறப்புப் பெற்ற படம். 100வது படத்தில் இவரைத் தவிர வேறு யாரும் ரிஸ்க் எடுத்து இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்க மாட்டார்கள்.

எல்லாம் இன்ப மயம் – வேலு

தசாவதாரம் படத்திற்கு முன்பாகவே கமல்ஹாசன் பலவித கெட்டப்புகளில் நடித்த படம். விதவிதமான ஏழு தோற்றங்களில் இந்தப் படத்தில் நடித்திருப்பார். இந்தப் படம் வெளிவந்த போது ஒரு நடிகரால் இப்படியெல்லாம் கூட நடிக்க முடியுமா என வியக்க வைத்த படம் இது. கமல்ஹாசன் என்ற நடிகருக்குள் இருந்த திறமைகளை இந்தப் படத்தின் ஒவ்வொரு கெட்டப்பும் வெளிக்காட்டியது.

மூன்றாம் பிறை – சீனிவாசன்

கமல்ஹாசன் நடித்த படங்களில் மிகச் சிறந்த படங்களின் வரிசையில் இந்தப் படமும் இடம் பெறும். சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கிக் கொடுத்த படம். தமிழ் சினிமாவில் கிளைமாக்ஸ் காட்சி ஒன்று இத்தனை வருடங்களுக்குப் பிறகும் திரைப்பட ரசிகர்களுக்கு ஞாபகம் இருக்கிறது என்றால் அது இந்தப் படம்தான். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்து கண்ணீர் விடாத ரசிகர்களே இல்லை என்று தாராளமாகச் சொல்லலாம்.

ஒரு கைதியின் டைரி – டேவிட், சங்கர்

கமல்ஹாசன் மீண்டும் இரு வேடங்களில் நடித்து ரசிக்க வைத்த படம். ஒரு கதாபாத்திரம் இளமையான கதாபாத்திரம், மற்றொன்று வயதான கதாபாத்திரம். இரண்டு கதாபாத்திரங்களிலும் கமலின் நடிப்பு ஒன்றுக்கொன்று வித்தியாசப்பட்டு இருக்கும். அதிலும் டேவிட் என்ற வயதான கதாபாத்திரத்தில் கமலின் நடிப்பு மிகவும் அழுத்தமாக இருக்கும்.

புன்னகை மன்னன் – சாப்ளின் செல்லப்பா, சேது

ஒன்றுக்கொன்று மாறுபட்ட கதாபாத்திரங்கள் கொண்ட படம். சாப்ளின் செல்லப்பா மிகவும் நகைச்சுவையான மனிதர், ஆனால், சேது காதலில் தோல்வியடைந்து மிகவும் சீரியசாக இருக்கும் மனிதர். இரண்டு கதாபாத்திரங்களிலும் கமல்ஹாசனின் நடிப்பு ரசிகர்களை மெய் மறக்கச் செய்த ஒன்று. முத்தக் காட்சியில் முத்திரரை பதித்ததற்கும் மேலாக தனது இரு வேட நடிப்பிலும் கமல் முத்திரை பதித்த படம் இது.

நாயகன் – வேலு நாயக்கர்

கமல்ஹாசன் படங்களில் இந்தப் படமும் ஒரு முக்கியமான படம். வயதுக்குத் தகுந்தபடி ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு விதமான தோற்றம். அதிலும் கொஞ்சம் வயதான பிறகு கமல்ஹாசன் நடிப்பில் இருந்த அனைத்து விஷயங்களும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய ஒன்று. 33 வயதில் ஒரு 60 வயதான ஒருவரின் தோற்றத்தையும், நடை, உடை, பாவனை ஆகியவற்றை அச்சு அசலாக அப்படிப்பட்ட ஒரு மனிதரைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் என நம் கண்முன் கமல்ஹாசன் நிகழ்த்திக் காட்டிய மாயாஜாலம் இந்தக் கதாபாத்திரம்.


சத்யா – சத்தியமூர்த்தி

ஒரு கோபக்கார முரட்டுத்தனமான இளைஞன்தான் சத்யா. தலையில் வளர்ந்துள்ள லேசான முடியும், அந்த தாடியும் இந்தப் படத்தை தானாகவே ஞாபகப்படுத்தி விடும். கமர்ஷியல் ஆக்ஷன் படங்களில் கூட சாதாரணமாக வந்து போகக் கூடாது, அதிலும் எதையாவது செய்ய வேண்டும் என்ற வேட்கை கமலிடம் இம்மாதிரியான படங்களில் வெளிப்படும். சத்யாவும் கமர்ஷியல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றதாகவே அமைந்தது.

அபூர்வ சகோதரர்கள் – சேதுபதி, அப்பு, ராஜா

இன்று வரை கமல்ஹாசனின் அப்பு ரகசியம் வெளியாகாமலே உள்ளது. அதை எப்போதுதான் சொல்வார் என்றும் தெரியவில்லை. அப்பா, இரு மகன்கள் என மூன்று கதாபாத்திரங்களில் கமல் நடித்த படம். குள்ளமான மனிதன் தோற்றத்திலும் ஒரு கதாபாத்திரம் ஆக்ஷனில் அசத்த முடியும், பழி வாங்கவும் முடியும் என்பதை உணர்த்திய படம். ஆக்ஷனுக்கு ஹைட் தேவையில்லை மூளை மட்டும் இருந்தால் போதும் என்ற குள்ள கமல் அப்புவின் நடிப்பிற்கு அடிமையாகாதவர்கள் யாருமில்லை.

மைக்கோல் மதன காமராஜன் – மைக்கேல், மதன், காமேஷ்வரன், ராஜா

இரு வேடக் கதாபாத்திரங்களை மட்டுமே அதிகமாகப் பார்த்துப் பழகிய தமிழ் சினிமாவில் நச்சென நான்கு கதாபாத்திரங்களில் நடித்து வியக்க வைத்தவர் கமல். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு விதம். பேச்சு, நடை, உடை, உடல் மொழி, பாவனை என அனைத்திலும் வியக்க வைத்தார். நடிப்பைக் கற்றுக் கொள்ள ஆசைப்படுபவர்கள் இந்த ஒரு படத்தைப் பார்த்தால் கூடப் போதும் எப்படி நடிக்கலாம் என்று கற்றுக் கொள்ளலாம்.

தேவர் மகன் – சக்திவேல்

கிராமத்துக் கதாபாத்திரங்களில் கமல்ஹாசன் அதிகம் நடிக்கவில்லையே என்று ஏங்கிய சிலருக்கு அந்த ஏக்கத்தைத் தீர்த்து வைத்த படம். முன் பாதியில் மாடர்ன் இளைஞனான ஃபன்க் ஹேர்ஸ்டைலுடன் வருபவர், இடைவேளைக்குப் பின் அப்படியே கிராமத்து கம்பீரமான இளைஞராக மாறிய அந்த டிரான்ஸ்பர்மேஷன் இன்று நினைத்தாலும் புல்லரிக்கும்.

மகாநதி – கிருஷ்ணசாமி

ஒரு பாசமான தந்தையின் பாசத்தையும், பரிதவிப்பையும் வெளிப்படுத்திய கதாபாத்திரம். வெறுமனே சினிமாவில் நடித்து பணம் சம்பாதித்து சொத்து சேர்த்து வைக்காமல், நல்ல நல்ல படங்களில் நடித்து நல்ல பெயரைச் சேர்த்து வைக்க வேண்டும் என்பதற்கு இந்தப் படம் மிகப் பெரும் உதாணரம். படிக்கட்டுகளில் உட்கார்ந்து கொண்டு மகளின் நிலையைக் கண்டு கமல் அழும் காட்சியை இன்று நினைத்தாலும் கண்களில் கண்ணீர் வரும்.

குருதிப்புனல் – ஆதி நாராயணன்

வழக்கமான காவல் துறைப் படங்களைப் பார்த்துப் பழகிய ரசிகர்களுக்கு காவல்துறையின் மற்றுமொரு பக்கத்தை, சிரத்தையைக் காட்டிய படம். எதிரிகளிடம் சிக்கிக் கொண்டு அடி வாங்கி கமல்ஹாசன் முகம் சிதைந்து நடித்த அந்த ஒரு காட்சி போதும் இந்தப் படத்தின் நடிப்பைப் பற்றிப் பாராட்ட. இப்படி ஒரு படம் மீண்டும் தமிழ் சினிமாவில் வருமா என்று தெரியாது.

இந்தியன் – சேனாபதி, சந்திரபோஸ்

அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களிலும் அருமையாக ஸ்கோர் செய்திருப்பார் கமல். இரண்டில் எந்தக் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார் என்று அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. பெரும்பாலானோர் அந்த வயதான அப்பா கதாபாத்திரத்தைப் பற்றியே சொன்னார்கள். இந்தியன் தாத்தா இன்றும் ரசிகர்களின் நினைவில் இருந்து கொண்டுதானிருக்கிறது.

அவ்வை சண்முகி – பாண்டியன், அவ்வை சண்முகி

கமலின் நடிப்பு வேட்கையில் இந்தப் படமும் ஒரு முக்கியமான படம். ஒரு வயதான பெண் வேடத்தில் ஒரு ஆண் மகனால் நடிக்க முடியுமா ?, எப்படி மேக்கப் மூலம் மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் என்ற கேள்விகளுக்கு தன் தோற்றம், நடிப்பின் மூலம் கமல் விடை சொன்ன படம். உச்சியில் இருக்கும் போது வேறு எந்த ஹீரோக்களும் செய்யத் துணியாத ஒரு கதாபாத்திரம். கமலின் சின்சியாரிட்டிக்கு இந்தப் படமும் ஒரு எடுத்துக்காட்டு.

தெனாலி – தெனாலி சோமன்

இலங்கைத் தமிழ் பேசி தமிழ்ப் படங்களில் யாரும் நடித்தது இல்லை. அதற்காக படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னால் எப்படிப் பேச வேண்டும் என பயிற்சி எடுத்து அதன் பின் கமல்ஹாசன் நடித்த படம். நகைச்சுவைக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதையும் மேம்போக்காகச் செய்யாமல் மெனக்கெட்டு செய்யும் குணம் கமலிடம் மட்டுமே உண்டு.

அன்பே சிவம் – நல்ல சிவம்

படம் வெளியான போது படத்தைப் பற்றிப் பாராட்ட முடியாதவர்கள் அதன் பின் தொலைக்காட்சியில் ஒவ்வொரு முறை ஒளிபரப்பாகும் போது பார்த்துப் பார்து சிலாகிக்கிறார்கள். தோற்றத்திலும் சரி, நடிப்பிலும் சரி, பேசும் பேச்சிலும் சரி கமல்ஹாசன் என்ற நடிகனின் திறமை மீண்டும் ஒரு முறை கைதட்டி ரசிக்க வைத்த படம்.

விருமாண்டி – விருமாண்டி

மீண்டும் ஒரு முறை கிராமத்துப் பக்கம் கமல் பயணித்த படம். கமர்ஷியல் ரீதியாகப் பெரிய வெற்றியைத் தரவில்லை என்றாலும் கதை சொல்லும் பாணியில் புதுமையைப் புகுத்திய படம். விருமாண்டி கதாபாத்திரத்தில் கமல்ஹாசனின் அந்த முறுக்கு மீசை போலவே அவருடைய கதாபாத்திரமும் முறுக்கேறி இருந்த படம்.

வசூல்ராஜா எம்பிபிஎஸ் – ராஜாராமன்

ஹிந்தியிலிருந்து ரீமேக் ஆகி வந்த படம். கமல்ஹாசன் நடிக்கிறார் என்றலே அதற்கு வேறு ஒரு கலர் வந்து விடும். அப்படித்தான் இந்தப் படமும் கமல்ஹாசனின் மற்றுமொரு கமர்ஷியல் வெற்றிப் படமாகவும் அமைந்தது. ஆரம்பம் முதல் கடைசி வரை கலகலப்பான கமல்ஹாசனை இந்தப் படத்தில் பார்க்கலாம். சென்னைத் தமிழைக் கமல் பேசும் லாவகமே தனி. அது மீண்டும் இந்தப் படத்தில் ஒலித்தது.

வேட்டையாடு விளையாடு – ராகவன்

ஒரு கம்பீரமான போலீஸ் அதிகாரி. எத்தனையோ போலீஸ் படங்களைப் பார்த்திருக்கலாம், கதாபாத்திரங்களைப் பார்த்திருக்கலாம். ஆனால், இந்த ராகவன் நிச்சயம் ஸ்பெஷலான கதாபாத்திரம்தான். கமல்ஹாசனின் நடிப்பில் மிகவும் மெச்சூர்டாகத் தெரிந்த ஒரு படம். இவரின் சிறந்த படங்களில் இந்தப் படத்திற்கும் நிச்சயம் இடமுண்டு.

தசாவதாரம் – 10 கதாபாத்திரங்கள்

இந்தப் படத்தின் பத்து கதாபாத்திரங்களைப் பற்றி பத்து வரிகளுக்குள் அடக்கி விட முடியாது. ஏன் பத்து பக்கங்களுக்குள் கூட அடக்கிவிட முடியாது. இந்தப் படத்தைப் பற்றியும், கமல்ஹாசன் நடித்துள்ள பத்து கதாபாத்திரங்களைப் பற்றியும் தனியாக ஒரு புத்தகம்தான் போட வேண்டும்.

விஸ்வரூபம் – விசாம் அகமது காஷ்மீரி

ஆக்ஷன் மட்டுமல்லாது நடிப்பிலும் கதாபாத்திர அமைப்பிலும் அசத்திய படம். கமல் நடிப்பில் மற்றுமொரு விஸ்வரூபத்தை வெளிப்படுத்திய படம். நாட்டில் நடக்கும் விஷயங்களை உடனுக்குடன் தன் படங்களில் இணைத்துப் படமெடுக்கும் கமல்ஹாசனின் இந்த விஸ்வரூபம் வெளியீட்டுச் சமயத்தில் கொஞ்சம் சிக்கலைச் சந்தித்தது. இருந்தாலும் அந்தச் சிக்கலே படத்திற்கு வெற்றியையும் தேடிக் கொடுத்தது.

பாபநாசம் – சுயம்புலிங்கம்

ஒவ்வொரு படத்திலும் கமல்ஹாசனின் நடிப்பைப் பார்க்கும் போது சுயம்புவாகவே ஒரு மனிதன் இப்படிப்பட்ட ஒரு நிலைக்கு வர முடியுமா என்று வியக்க வைக்கும். இந்தப் படத்தில் நெல்லைத் தமிழைக் கமல் பேசிய அழகும், மகள்கள் மீது அதிக பாசம் வைத்துள்ள அப்பாவின் பாசத்தையும் வெளிப்படுத்திய விதம் அனைத்து மகள்களுக்கும் ஒரு ஏக்கத்தைக் கொடுத்திருக்கும்.

தூங்காவனம் – திவாகர்

பரபர ஆக்‌ஷன், நடந்தது என்ன என்பதே ஒன்லைன் மூலம் தெரிவிப்பது தூங்காவனம். விஸ்வரூபம் படத்திற்குப் பிறகு இடையில் வந்த இரண்டு படங்களுமே குடும்பம், செண்டிமெண்ட் என கொஞ்சம் வேறு கதைக்களமே. ஆனால் மீண்டும் ஆக்‌ஷன் அவதாரத்தில் மிரட்டியிருக்கிறார்.

1959ம் ஆண்டில் ஆரம்பமான கமல்ஹாசனின் கலைப் பயணம் 2015 வரையிலும் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. தான் எடுத்துக் கொண்ட பணியின் மீது தீராக் காதலுடன் உழைக்கும் ஒரு கலைஞனை இத்தனை ஆண்டுகளாப் பார்ப்பது அதிசயத்திலும் அதிசயம்தான். அது கமல்ஹாசனால் மட்டுமே முடியும் என்பதே உண்மை.

Comments

அட்டகாசத்துடன் வெளியானது விஸ்வாசம் படத்தின் ஓபனிங் பாடல்

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கான ஓப்பனிங்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon