Primary Menu

Top Menu

September 20, 18

கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது நாக சைதன்யா – சமந்தா திருமணம் !!

கோவாவில் நேற்று நள்ளிரவு நாக சைதன்யா – சமந்தா திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

‘பாணா காத்தாடி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்கமகன், தெறி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விஜய் ஜோடியாக மெர்சல் படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கு பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் தெலுங்கில் ‘ஏம் மாய சேஸாவே’ என்ற பெயரில் தயாரானபோது அதில் திரிஷா வேடத்தில் சமந்தா நடித்தார். அந்த படத்தில் கதாநாயகனாக நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா அறிமுகமானார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.

அதன் பின்னர் இந்த ஜோடி, மேலும் 3 படங்களில் நடித்தனர். இதனால் இவர்களது காதல் வளர்ந்தது. ஆனால் வழக்கம்போல் ‘நாங்கள் காதலிக்கவில்லை’ என கூறி வந்தனர். இந்த விஷயம் இரு வீட்டாரின் பெற்றோருக்கு தெரியவந்தது. பின்னர் இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். மேலும் சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். நாகசைதன்யா இந்து. எனவே திருமணத்தை இந்து, கிறிஸ்தவ முறைப்படி இரண்டு தடவை நடத்த முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களது திருமணம் நேற்று நள்ளிரவு கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு சுமார் 150 பேர் மட்டுமே ஹைதராபாத்திலிருந்து தனிவிமானத்தில் கோவாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள்.

திருமணத்துக்காக ஓட்டலை மின் விளக்குகளால் அலங்கரித்து இருந்தார்கள். நேற்று மாலை 3 மணியளவில் சமந்தாவுக்கு மருதாணி வைக்கும் வைபவம் நடைபெற்றது. நேற்று நள்ளிரவு 11.52 மணிக்கு இந்து முறைப்படி சமந்தா கழுத்தில் நாக சைதன்யா தாலி கட்டினார். உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் அனைவருமே அட்சதைத் தூவி புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும் கோவாவிலேயே இன்று மாலை 5.30 மணிக்கு கிறிஸ்தவ முறைப்படி இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்கிறார்கள்.

கோவாவில் பிரசித்தி பெற்ற ‘டபிள்யூ’ எனும் நட்சத்திர ஓட்டலில் இந்தத் திருமணம் நடைபெற உள்ளது. இந்த ஓட்டலில் ஒரு அறைக்கான தினசரி கட்டணம் ரூ.16 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை என கூறப்படுகிறது. விரைவில் ஹைதராபாத்தில் வெகு விமரிசையாக திருமண வரவேற்பு நடத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.10 கோடி வரை செலவு செய்ய உள்ளனர். இந்த செலவை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவர் மட்டுமே ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon