Primary Menu

Top Menu

September 24, 18

எளிமையான கிறிஸ்துமஸ் ! அன்பு அழைப்பு

இயேசு கிறிஸ்து பிறப்பு பெருவிழாவினை வருகின்ற 25ம் தேதி உலகமெங்கும் மக்கள் கொண்டாடி மகிழ உள்ளனர்.

இயேசு கிறிஸ்து பிறப்பு பெருவிழாவினை வருகின்ற 25ம் தேதி உலகமெங்கும் மக்கள் கொண்டாடி மகிழ உள்ளனர்.

கிறிஸ்து பிறப்பு பெருவிழா என்பது கடவுள் நம்மோடு வாழ்கிறார் என்பது தான் ! இது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல. மாறாக, மானுட வரலாற்றில் இயேசு என்னும் வரலாற்று நாயகன் வாழ்ந்து காட்டிய வாழ்வியல் மதிப்பீடுகளுக்கு மீண்டும் மீண்டும் உயிரோட்டம் கொடுப்பதுவே !இன்றைய சூழல், போர்களும் வன்முறை கலாச்சாரங்களும் பாகுபாடுகளும் பிரிவுகளும் பிளவுகளும் பேதங்களும் மிகுந்ததாக உள்ளன.

தோழமையுணர்வோடும் சகோதர மனப்பான்மையோடும் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

கிறிஸ்தவம் என்பது வெறுமனே ஒரு மதம் மட்டுமல்ல, வாழ்வியல் அறநெறிகளை நிலை நிறுத்துவதற்காக எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்கும் ஓர் ஆற்றல்.

 

கிறிஸ்தவம் என்பது இரக்கம்

கிறிஸ்தவம் என்பது மன்னிப்பு

கிறிஸ்தவம் என்பது பகிர்வு

கிறிஸ்தவம் என்பது அன்பு

 

இத்தகைய வாழ்வியல் மதிப்பீடுகளை அர்த்தமுள்ளதாக்குவதற்குத்தான் கிறிஸ்து பிறப்பு பெருவிழா கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, இந்த ஆண்டில் வெள்ளத்தினால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள சகோதர, சகோதரிகளுக்கு இரக்க உணர்வோடு அவர்களின் மறுவாழ்விற்காக வாழ்வாதாரங்களை உருவாக்கி தருவதும் பெற்றுத்தருவதும் தான் இந்த கிறிஸ்துமசை அர்த்தமுள்ளதாக்குகிறது.

தமிழக கத்தோலிக்க திருச்சபை பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது உதவிகளை செய்துகொண்டே இருக்கிறது. இத்தகைய இரக்க உணர்வோடு செயல்படுவது என்பது எங்களுக்கு புதிதல்ல.
கிறிஸ்தவம் என்பதே இரக்கம் தான், உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்.
என்ற இறைவார்த்தையை கூறி இரக்க உணர்வோடு வாழ இந்த ஆண்டினை இரக்கத்தின் யூபிலி ஆண்டாக கொண்டாட எங்கள் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் உலகிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அத்தகைய இரக்க உணர்வினையும் பாதிக்கப்பட்ட சகோதரர்களோடு எங்களது தோழமை எந்தர்களும் உண்டு என்பதை வெளிப்படுத்துவதற்காகவும் எங்களுடைய மதுரை உயர்மறை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பணித்தளங்களிலிருந்து நிவாரண நிதியும் பொருளுதவியும் பெறப்பட்டு தமிழக கத்தோலிக்க திருச்சபையின் பல்நோக்கு சமூக மையங்களின் வழியாக உதவிகள் வழங்கப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன.

இந்த கிறிஸ்துமஸ் நிச்சியமாக எங்களுக்கு ஓர் அர்த்தமுள்ள விழா. மதத்தினை கடந்து சமூக அக்கறையோடு பட்டினியால் வாடுவோருக்கு உணவளிப்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதும் வாடிய உள்ளங்களுக்கு ஆறுதல் அளிப்பதும் அனாதைகளாக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தருவதும் காலத்தின் கட்டாயம் என்பது கிறிஸ்தவம்
உணர்ந்திருக்கிறது.

இதை அர்த்தமுள்ள விதத்தில் கொண்டாடுவது தான் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின் நோக்கம்.
அந்த சீரிய நோக்கத்தினை நிறைவேற்றிட ஆடம்பர கொண்டாட்டங்களை குறைத்து பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களோடு எளிமையான கிறிஸ்துமசை கொண்டாட அன்போடு அழைக்கிறேன்.

 

கட்டுரை ஆசிரியர் – மேதகு அந்தோணி பாப்புசாமி,
மதுரை உயர்மறை மாவட்டம்

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon